Saturday, March 10, 2007

306. காஞ்சி திவ்ய தேசப் பயணம் - Part 3

புனித யாத்திரையின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகளை வாசித்து விட்டுத் தொடரவும்.

அடுத்து, திருவேளுக்கையில் எழுந்தருளியுள்ள அழகியசிங்கரை சேவிக்க புறப்பட்டோம். தாயார் அம்ரிதவல்லி நாச்சியார். சிறப்பான தரிசனம் !


இத்திருத்தலத்தை பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

2307:
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,*
நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெ·காவும்* வேளுக்கைப் பாடியுமே,*
தாம்கடவார் தண் துழாயார்.

2315@
அன்று இவ்வுலகம்* அளந்த அசைவேகொல்,*
நின்றிருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று
கிடந்தானைக்* கேடில்சீரானை,*முன் கஞ்சைக்
கடந்தானை* நெஞ்சமே. காண்.

2343@
விண்ணகரம் வெ·கா* விரிதிரைநீர் வேங்கடம்,*
மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த
தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
**********************************************

அடுத்து, பரமேஸ்வர விண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் வைகுந்தப் பெருமாள் என்னும் பரமபதநாதனைச் சேவித்தோம்.

இக்கோயில் ரம்யமான சூழலில் அமைந்திருப்பது, மனதில் ஒர் இதமான உணர்வை ஏற்படுத்தியது.

கோயில் உள்பிரகாரச் சுவர்கள் முழுதும் பழமை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளை காண முடிந்தது. சரியான பராமரிப்பின்றி, பல சிற்ப வடிவங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டன. இக்கோயில் இந்திய தொல்பொருள் கழகத்தின் கட்டுப்பாட்டில் வருவதாக, எங்களுடன் வந்த நண்பர் தெரிவித்தார்.


இத்திருத்தலத்தை திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்துள்ளார்.
1128@..
சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்*
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான்* தடம் சூழ்ந்து அழகாயகச்சி*
பல்லவன் வில்லவனென்று உலகில்* பலராய்ப்பல வேந்தர் வணங்குகழல் பல்லவன்*
மல்லையர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே.

வேதம் உரைப்பதின் பொருளாகவும், வேத நாதத்தின் ஒலியாகவும், ஐம்புலன்களால் அறிவதற்கு அப்பாற்பட்டவனும், சிவபிரம்மத்தினுள் அந்தர்யாமியாக திகழ்பவனும் ஆன எம்பெருமானை, உலக மன்னர்களெல்லாம் போற்றிப் பணியும் பல்லவ மாமன்னன், இப்பரமேஸ்வர விண்ணகரத்தில் திருவடி பணிந்து வணங்கினான்.

1136@
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து* முன்னே ஒரு கால்செருவில் உருமின்*
மறையுடை மால்விடையேழடர்த்தாற்கு இடந்தான்* தடம் சூழ்ந்த அழகாயகச்சி*
கறையுடைவாள் மறமன்னர்க்கெட* கடல்போல் முழங்கும் குரல்கடுவாய்*
பறையுடைப் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே.

பிறை போன்ற அழகிய நெற்றியைக் கொண்ட நப்பின்னையின் கரம் பற்ற வேண்டி, ஒரு சமயம், இடியை ஒத்த குரல் உடைய ஏழு வலிமை மிக்க எருதுகளை, கண்ணபிரான் மிக எளிதாக வீழ்த்தி அழித்தான். அப்பெருமானே, அழகிய குளிர்த் தடாகங்கள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள பரமேஸ்வர விண்ணகரத்தில் எழுந்தருளி இருக்கிறான்.

குருதிக் கறையுடைய வாளை கையில் ஏந்திய பகை நாட்டு மன்னரெல்லாம் வீழ்ந்து போகும்படியாக, ஆர்ப்பரிக்கும் கடலலைக்கு ஒத்த பேரொலி எழுப்பும் போர் முரசு கொட்டும் படை கொண்ட பல்லவ மாமன்னன், இப்பரமேஸ்வர விண்ணகரத்தில் ஆட்சி புரியும் வைகுந்த நாதனை வணங்கி திருவடி பணிந்தான்.

*********************************

அடுத்து, மிக்க பழமை வாய்ந்த தீபப்பிரகாசர் என்னும் விளக்கொளிப் பெருமாள் அருள் பாலிக்கும்
திருத்தண்கா
திவ்யதேசத்திற்குச் சென்று, பெருமாளையும், மரகதவல்லித் தாயாரையும் தரிசித்தோம்.


திருமங்கை மன்னன் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததோர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே.

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை* மூவா-
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற,*
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய-
அந்தணனை* அந்தணர்தம் சிந்தை யானை,*
விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில்*
வெ·காவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று*
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே. 14

மற்ற ஆழ்வார்களை விட, அதிகமான திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையார் தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன், தன் துணைவி குமுதவல்லி நாச்சியாருடன் (ஆழ்வாரை நல்வழிப்படுத்தி வைணவ அடியாராய் ஆக்கிய இப்பெண்மணி போற்றுதலுக்குரியவர்) நடையாய் நடந்து, பரத கண்டத்தில் உள்ள பல வைணவத் தலங்களுக்கு விஜயம் செய்து, பரமபக்தியில், மனமுருகி திருப்பாசுரங்கள் இயற்றி, அவற்றைப் பாடல் பெற்ற தலங்களாக (வைணவ திவ்யதேசங்களாக) ஆக்கியவர் கலியன் என்றும் அழைக்கப்படும் இப்பெருமகனார் ! பரமனுக்கே பெருமை சேர்த்த வைணவ அடியார்களின் வரிசையில் இவருக்கு சிறப்பிடம் தரப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் !

திருத்தண்கா கோயிலுக்கு அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகரை சேவித்தோம். அவரது தத்துவ விசார வாதத் திறமையின் காரணமாக, பாகவத சிம்மம் என்று போற்றப்பட்டவர். தமிழ், சமஸ்கிருதம் என்று இரு மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். உத்சவத்தின் போது, உத்சவ தேசிகர் பவனி வரும் யானை, சிம்மம், யாளி வாகனங்கள் தேசிக சன்னிதியின் வலது புறம் பளபளப்பாக காட்சியளித்தன !
******************************
காஞ்சியில் உள்ள 14 திவ்யதேசங்களின் தரிசனம் நிறைவடைந்தபோது, மாலை மணி 6.30 மணியாகி விட்டது. 15-வது திவ்யதேசமான திருப்புட்குழி காஞ்சி-வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அங்கும் சென்று, விஜயராகவப் பெருமாளையும், மரகதவல்லித் தாயாரையும் கண் குளிர சேவித்தோம். மிக அற்புதமான சேவை என்று கூறுவேன் ! இத்தலப் பெருமாள் ராம ரூபமாய் அறியப்படுபவர். இராமபிரான், தன் பொருட்டு இராவணனுடன் போரிட்டு உயிர் துறந்த ஜடாயுவை தகனம் செய்தபோது, அக்னி ஜ்வாலையில் எழுந்த வெப்பத்தின் தீவிரத்தைத் தாள முடியாத காரணத்தினாலே, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள், பெருமாளை பார்த்தபடி, அவர் பக்கம் தலை சாய்த்தபடி காட்சியளிப்பது ஐதீகம் என்று கோயில் பட்டர் கூறினார்.

இக்கோயில் தீர்த்தமும் ஜடாயு தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சமீபத்தில் சீரமைக்கப்பட்டு, கோயில் அழகாகத் தோற்றமளிக்கிறது.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்:
1115:##
அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு* அழியுமால் என்னுள்ளம். என்னும்*
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்* போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலங்கெழு கொல்லி கோமளவல்லிக்* கொடியிடை நெடுமழைக் கண்ணி*
இலங்கெழில் தோளிக்கு என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.

ஒரு வழியாக, திட்டமிட்டபடி 15 வைணவத் திருப்பதிப் பெருமாள்களையும் ஆனந்தமாக தரிசித்து, மன நிறைவுடனும், சந்தோஷமாக அளாவளவிய நினைவுகளுடனும், இரவு 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 306 ***

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test comment !

வடுவூர் குமார் said...

நன்றி நன்றி பல கோடி.
கணினியை விட்டு நகராமல் எங்களையும் உங்களோடு சுற்றவைத்ததற்கு.

துளசி கோபால் said...

பாலா,

படங்களும் பாசுரங்களுமா பதிவு அருமையா இருக்கு.

அதிலும் உற்சவ மூர்த்திகள் அலங்காரங்களுடன் அப்படியே
அள்ளிக்கிட்டுப் போறாங்க என் மனசை.

திருப்தியா இருக்கு.
நல்லா இருங்க .

enRenRum-anbudan.BALA said...

குமார், துளசி அக்கா,

தங்கள் வருகைக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. திவ்யதேசப் பயணம் தொடரும் !

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Test !

jeevagv said...

தொடர்ந்து பதிவையும் படங்களையும் கண்டு மகிழ்ந்தேன்.
படிப்பதற்கு நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி!

ஐயங்கார் said...

காஞ்சி காமகேடிய பார்த்தீங்களா பாலா சார்?

கருப்பு said...

என்னத்தை பன்னி என்ன செய்ய?

எத்தனை கோயிலுக்கு போயும் பாப்பான் மட்டுமே பெரியவன்னு சொன்னா எதால அடிக்கலாம்?

enRenRum-anbudan.BALA said...

ஜீவா,
தங்கள் தொடர்ந்த வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல !

எ.அ.பாலா

//காஞ்சி காமகேடிய பார்த்தீங்களா பாலா சார்?
//
நடந்தேறிய கொலை வழக்கு விவகாரத்திற்குப் பின் அவர் மேல் இருந்த நம்பிக்கை மிகவும் குறைந்து விட்டது !

இதைப் பற்றி அப்போதே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அவரைப் பார்க்கும் ஆர்வமும் இல்லை. அவர் ஒருவரை வைத்து காமகோடி பீடத்தை எடை போடுவது சரியாகாது.

//என்னத்தை பன்னி என்ன செய்ய?

எத்தனை கோயிலுக்கு போயும் பாப்பான் மட்டுமே பெரியவன்னு சொன்னா எதால அடிக்கலாம்?
//
பார்ப்பனர்களின் மீது தனிப்பட்ட காழ்ப்பு பிடித்து அலைபவர்களை எதால் அடிக்கலாமோ, அதாலேலே, பார்ப்பனர் மட்டுமே பெரியவர் என்று சொல்பவர்களையும் அடிக்கலாம் !

நான் பார்ப்பனர் உயர்ந்தவர் என்று எங்கேயும் எழுதியதில்லை. என்னிடம் ஏன் இக்கேள்வி ????

பதிவுக்குச் சம்பந்தமில்லாதவை இனிமேல் பிரசுரிக்கப்பட மாட்டாது, நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails